தொடர் நீர்வரத்து எதிரொலி, வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக நீடிப்பு
தொடர் நீர்வரத்து எதிரொலியாக வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக நீடித்து வருகிறது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணை, வைகை அணை ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 54 அடி வரை தண்ணீர் இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்தும் இருந்தது. இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மதுரை, திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல் போக பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் தண்ணீர் திறந்துவிடப்பட்ட போதிலும் அணையின் நீர்மட்டம் குறையாமல் தொடர்ந்து 54 அடியாகவே தற்போது வரை நீடிக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் இதே அளவிலேயே இருக்கிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், வைகை அணைக்கு நீர்வரத்தும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் ஒன்றாக உள்ளது.
அதாவது, வினாடிக்கு 900 கன அடி நீர்வரத்து உள்ளது. அதே அளவு தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதனாலேயே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 54 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன் பின்னர் பருவமழை பெய்வதை பொறுத்து 120 நாட்கள் வரை தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அணையின் நீர்மட்டம் குறைந்தால் முறைப்பாசனம் அமல்படுத்தபட்டு 120 நாட்கள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story