கீழணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வருகிறது, வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்வு
கீழணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.80 அடியாக உயர்ந்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுடன் இன்று ஆலோசனை நடக்கிறது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
மேலும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு இந்த ஏரிக்கு உண்டு. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரி நீர்மட்டம் 39.30 அடியாக குறைந்தது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த மாதம் 13-ந்தேதி தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணை, கீழணை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 22-ந் தேதி மதியம் வந்து சேர்ந்தது.
கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் வரத்துக்கு ஏற்ப வினாடிக்கு ஆயிரம் கனஅடி முதல் அதிகபட்சமாக 2,300 கனஅடி வரை வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
நேற்று முன்தினம் முதல் கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும் நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக உயர்ந்தது. இதனால் ஏரி, கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 46 கனஅடி அனுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே வீராணம் ஏரி பாசனத்துக்காக கூடுதல் தண்ணீரை கேட்டுள்ளோம். போதிய அளவு தண்ணீரை திறந்து விடுவதாக உயர் அதிகாரிகள் கூறி உள்ளனர். நாங்கள் எதிர்பார்த்தபடி தண்ணீர் வந்தால், முதலில் வீராணம் ஏரி முழுமையாக நிரப்பப்படும். பின்னர் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக வடவாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் சேமித்து வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு வாய்க்கால் வழியாக திறந்து விடப்பட்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) சிதம்பரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், விவசாயிகள் எந்த தேதியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறுகிறார்களோ?, அந்த தேதியில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.
Related Tags :
Next Story