41 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது


41 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது
x
தினத்தந்தி 5 Sep 2019 11:15 PM GMT (Updated: 5 Sep 2019 7:14 PM GMT)

சென்னையில் நேற்று 41 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2-ந்தேதி நடந்தது. இதையொட்டி இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. சென்னையில் போலீசார் அனுமதியுடன் 2 ஆயிரத்து 632 சிலைகள் வைக்கப்பட்டது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், நீலாங்கரை பல்கலைநகர் ஆகிய கடற்கரை பகுதிகளில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 5-ந்தேதி (நேற்று), 7-ந்தேதி (நாளை) மற்றும் 8-ந் தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். நேற்று முன்தினம் 167 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

எண்ணூர் ராமகிருஷ்ணா நகரில் 10 சிலைகள், காசிமேடு மீன்பிடி பகுதிகளில் 7, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் 11, நீலாங்கரை பல்கலைநகரில் 13 என மொத்தம் 41 விநாயகர் சிலைகள் மேள-தாளங்கள் முழங்க வாகனங்களில் கொண்டு வரப்பட்டு நேற்று கடலில் கரைக்கப்பட்டன.

2-ம் கட்ட ஊர்வலம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. மெரினா கடற்கரை சாலையின் இருபுறமும் விநாயகர் சிலைகள் அணிவகுத்து வருவதை காணலாம்.

இந்த பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீஸ் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சிலைகளை கடலில் தூக்கி கரைப்பதற்கு உதவியாக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட உள்ளன.

அன்றைய தினம் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிரடி படை போலீசார் குவிக்கப்பட உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

Next Story