அரசு பஸ்சில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


அரசு பஸ்சில் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2019 4:00 AM IST (Updated: 6 Sept 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் அரசு பஸ்சில் மோதியதில் பரிதாபமாக இறந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மகன் மணிகண்டன்(வயது 20). அதேபோல் சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மகாராஜ்(20). இவர்கள் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் ராமச்சந்திரபுரம் பகுதியில் வாடகை அறையில் தங்கி அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மணிகண்டன், மகாராஜ் ஆகியோர் ராமச்சந்திரபுரத்தில் இருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன்கோவிலில் இருந்து அரசு பஸ் ஒன்று வத்திராயிருப்பு நோக்கி வந்து கொண்டிருந்தது. முனியாண்டி கோவில் அருகே அரசு பஸ் வந்தபோது மணிகண்டன், மகாராஜ் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி பஸ்சின் முன்பகுதியில் வேகமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பஸ்சில் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story