கரூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,488 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில சிறுவன் உள்பட 4 பேர் கைது


கரூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,488 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில சிறுவன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2019 3:30 AM IST (Updated: 6 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,488 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் சின்னஆண்டாங்கோவில் ரோடு பாண்டியன் நகரில் உள்ள ஒரு வீட்டில், சரக்கு வேனில் கொண்டு வந்து அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். போலீசை கண்டதும், சரக்கு வேன் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுகன் (27) என்பவர் தப்பியோடிவிட்டார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த வீட்டை சோதனையிட்டபோது அதில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களும், கரூர் அருகே முருகநாதபுரத்தில் வீட்டுஉபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர்களுமான சாவ்லாராம் (வயது 30), ஜிதேந்திரகுமார் (21), 16 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து குறைந்த விலைக்கு புகையிலை பொருட்களை வாங்கி வந்து, கரூர் பாண்டியன் நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெட்டிக்கடைகளில் கொடுத்து மறைமுகமாக அதனை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து புகையிலை பொருட்கள் இருந்த மூட்டைகளை போலீசார் எடை போட்டு பார்த்தனர். இதில் 1,488 கிலோ இருந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 16 வயது சிறுவன், சாவ்லாராம், ஜிதேந்திரகுமார், தப்பியோடிய வேன் டிரைவர் சுகன் ஆகிய 4 பேரையும் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர். இந்த விற்பனையில் முக்கிய பிரமுகர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? எந்தெந்த கடைகளுக்கெல்லாம் விற்பனைக்காக புகையிலை பொருட்களை அனுப்பியுள்ளனர் என்பன போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் புகையிலை பொருட்களுடன், சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story