கூடலூர் ஒட்டான்குளம், சின்னமடை பகுதியில் விரிசல் - பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்


கூடலூர் ஒட்டான்குளம், சின்னமடை பகுதியில் விரிசல் - பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 6 Sep 2019 9:30 PM GMT (Updated: 6 Sep 2019 4:15 PM GMT)

கூடலூர் ஒட்டான்குளம் சின்னமடை பகுதியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூடலூர், 

கூடலூரின் மையப்பகுதியில் மைத்தலை மன்னடியான்குளம் என்று அழைக்கப்படும் ஒட்டான்குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்திற்கு மழைக்காலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள சுரங்கனார் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் மழை நீரும், முல்லைப்பெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாய் வழியாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. இந்த குளம் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. மேலும் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த குளம் தூர்வாரப்படவில்லை.

எனவே ஒட்டான்குளத்தை தூர்வார வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் மனுக்கள் கொடுத்தனர். இதையொட்டி கடந்த ஆண்டு 15 நாட்கள் மட்டும் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. பின்னர் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பெரியமடை, சின்னமடை பகுதிகளில் உள்ள மதகு களை பொதுப்பணித்துறையினர் சீரமைக்கவில்லை.

தற்போது முல்லைப்பெரியாற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் கொண்டுவரப்பட்டு ஒட்டான்குளத்தில் தேக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரத்து வாய்க் கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் சின்னமடை பகுதியில் விரிசல் ஏற்பட்டு அது இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சேதம் அடைந்துள்ள சின்னமடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story