திருப்பத்தூர் அருகே, பூட்டிய வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை - தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி


திருப்பத்தூர் அருகே, பூட்டிய வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை - தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி
x
தினத்தந்தி 7 Sept 2019 4:00 AM IST (Updated: 6 Sept 2019 10:06 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தொடர் சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே நாட்டறம்பள்ளி செல்லும் வழியில் உள்ள கதிரிமங்கலத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி (வயது 36). கூலித்தொழிலாளி. இவரது கணவர் தீனதயாளன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் அருண்குமார் (19) பாலிடெக்னிக் கல்லூரியிலும், மகள் ஐஸ்வர்யா கலைக்கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இவர்களது வீடு ஊரின் கடைசி பகுதியில் உள்ளது.

கணவர் இறந்தபின்பு ஜான்சிராணி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவர் தற்போது 100 நாள் திட்டத்தில் வேலைபார்க்கிறார். நேற்று காலை மகன், மகள் கல்லூரிக்கு சென்றபின் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மகன் அருண்குமார் வீடு திரும்பினார். உள்ளே சென்றபோது பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டிருந்தது.

வெளிகேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் கொள்ளையர்கள் மாடி வழியாக ஏறி உள்ளே இறங்கி நகை இருந்த அறையின் கதவை உடைத்து திறந்துள்ளனர். இது குறித்து தாயார் ஜான்சிராணிக்கு அருண்குமார் தெரிவிக்கவே அவரும் விரைந்து வந்தார். பீரோவில் பார்த்தபோது மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அவசர அவசரமாக கொள்ளையடித்துக்கொண்டு தப்பியபோது கட்டிலில் 1½ பவுனை போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் ஜான்சிராணி புகார் அளித்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளை நடந்த வீட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்தனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

திருப்பத்தூர் பகுதியில் ஏற்கனவே கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீரபத்திரன் மற்றும் முரளி ஆகியோர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. அதன்பின் நாட்டறம்பள்ளியில் வக்கீல் சிவராமன் என்பவர் வீட்டில் பெண்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்து கொள்ளை நடந்தது.

திருப்பத்தூரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாணியம்பாடியில் பாரூக் என்பவர் வீட்டில் கொள்ளையர்கள் உணவு தயாரித்து சாப்பிட்டுவிட்டு நகை, மோட்டார்சைக்கிளை எடுத்துச்சென்றனர். மறுநாள் தனியார் நிறுவன அதிகாரி தவுசீப்அஹமத் என்பவர் வீட்டில் 22 பவுன் நகையை கொள்ளையடித்துக்கொண்டு குளிர்பானத்தையும் குடித்து விட்டு தப்பினர்.

தினமும் இந்த பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் கொள்ளை நடந்து வருகிறது. அதுவும் நேற்று பட்டப்பகலிலேயே ஜான்சிராணி வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த சம்பவங்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்சம்பவங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் வேலைபார்க்கின்றனர். இரவு நேரங்களில் அவர்கள் சர்வசாதாரணமாக சுற்றித்திரிகின்றனர். வேலை தேடிவருவதுபோல் இங்கு வந்து வடமாநில நபர்கள் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கின்றனர். போலீசார் இதனை தடுக்க தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். அவர்கள் சரியான முறையில் ரோந்து செல்கின்றனரா? என்பதை டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நள்ளிரவில் சென்று ஆய்வு செய்து கொள்ளையை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story