பாரிமுனையில் ஹவாலா கும்பலிடம் ரூ.80 லட்சம் கொள்ளை 5 பேர் கைது


பாரிமுனையில் ஹவாலா கும்பலிடம் ரூ.80 லட்சம் கொள்ளை 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sep 2019 10:15 PM GMT (Updated: 6 Sep 2019 6:47 PM GMT)

பாரிமுனையில் ஹவாலா கும்பலிடம் ரூ.80 லட்சம் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிராட்வே,

ஹாங்காங் நாட்டை சேர்ந்தவர் அபு. இவர், சட்டவிரோதமாக ஹவாலா பண பரிமாற்றம் செய்து வந்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் காயல்பட்டினத்தை சேர்ந்த அபிதீன் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இதற்காக சென்னை பாரிமுனையில் உள்ள அங்கப்ப நாயக்கன் தெருவில் அலுவலகம் வைத்து, அபு மற்றும் அபிதீன் ஆகியோர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஹவாலா பண பரிமாற்றத்தை செய்து வந்தனர்.

இந்த அலுவலகத்தை முகமது ரிஸ்வான் என்பவர் கவனித்து வந்தார். கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி, அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர் ரஞ்சித் என்பவர் உதவியுடன் ஒரு மர்மகும்பல் பட்டாக்கத்தி, அரிவாள் பயன்படுத்தி, முகமது ரிஸ்வானை தாக்கி அவரிடம் இருந்த ரூ.80 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. இதுதொடர்பாக புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு கடற்கரை தனிப்படை பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஹவாலா பணம் திருட்டுபோனது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். பின்னர், பாலாஜி, பிரகாஷ் உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, அரிவாள், ஆட்டோ மற்றும் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Next Story