கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:45 PM GMT (Updated: 6 Sep 2019 7:22 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு,

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய பாதிப்புகளை நீக்கவேண்டும், ஜாக்டோ ஜியோ போராளிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், தற்காலிக பணி நீக்கம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்ப பெறவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்மாப்பேட்டை வட்டார ஜாக்டோ-ஜியோ சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அம்மாப்பேட்டை வட்டார தலைவர் ப.சண்முகசுந்தரம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணதாசன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வீராகார்த்திக், ஊரக வளர்ச்சி துறையின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மாவட்ட செயலாளர் யு.கே.சண்முகசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முன்னதாக வட்டார செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார் முடிவில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயலாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார்.

இதேபோல் அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ-ஜியோவின் அந்தியூர் வட்டார தலைவர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை 30 நிமிடம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினார்கள்.

பவானியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க பவானி வட்டார தலைவர் செந்தாமலர் தலைமை தாங்கினார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் தியாகு, தமிழக ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் ஜெயங்கொண்டான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் சிவக்குமார், வட்டார செயலாளர் முருகேசன், தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திருமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கத்தின் மொடக்குறிச்சி வட்டக்கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் யமுனா உள்பட 60-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சுப்பையன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க தாலுகா துணைத்தலைவர் ஜோதிமணாளன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் அருள்சுந்தர ரூபன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் முருகேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க உறுப்பினர்கள் அர்ஜூனன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story