அத்தியாவசிய பொருட்கள் பற்றி குறை கூறுவதா? ‘ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யலாம்’ - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


அத்தியாவசிய பொருட்கள் பற்றி குறை கூறுவதா? ‘ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யலாம்’ - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 7 Sept 2019 4:45 AM IST (Updated: 7 Sept 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்கள் பற்றி குறை கூறும் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கொள்ளட்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைமையிடமான திருச்சி பழைய குட்செட் ரோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டுறவுத்துறை மற்றொரு பரிணாமத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இதுஒரு சான்று. அம்மா சிறு பல்பொருள் கூட்டுறவு அங்காடியானது அனைத்து இடங்களிலும் வரவேற்கப்பட்டுள்ளது. 300 வகையான தரமான ஐ.எஸ்.ஐ. சான்றிதழ் பெற்ற மக்கள் விரும்பக்கூடிய நிறுவன பொருட்கள் 5 சதவீதம் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. நடப்பாண்டில் 582 கடைகள் திறக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் திறந்து கொண்டிருக்கிறோம்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் காங்கிரசும், தி.மு.க.வும் கொண்டு வந்த திட்டம். ஆனால், இன்று பாரதீய ஜனதாவும், அ.தி.மு.க.வும் தான் கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. மத்திய உணவு பாதுகாப்பு சட்டத்தை 2013-ல் காங்கிரஸ்-தி.மு.க. அரசுதான் கொண்டு வந்தது.

அதில் கையெழுத்திட்டதும் தி.மு.க.தான். மீத்தேன், கெயில் திட்டமும் அவர்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான். இன்று மக்கள் எதிர்த்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தால் தமிழக மக்களுக்கு கடுகளவும் பாதிப்பு இல்லை. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை என்றும், ‘இன்றுபோய், நாளை வா’ என மக்களிடம் விற்பனையாளர்கள் கூறுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார். துவரம் பருப்பு, பாமாயில் சிறப்பு பொதுவினியோக திட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் சிறப்பு வினியோக திட்டத்தை எந்த அடிப்படையில் செயல்படுத்தினார்கள்?. 2008-ம் ஆண்டு மத்திய அரசு மானிய விலையில் பருப்பு வழங்க உதவித்தொகை கொடுத்தது. 1 கிலோவுக்கு ரூ.10 வழங்கியது. ரூ.10-ஐ வாங்கி கொண்டுதான் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது சிறப்பு பொதுவினியோக திட்டத்தை நிறைவேற்றினார். அன்று கிலோ ரூ.52-க்கு விற்றதை, இவர்கள் ரூ.42-க்கு விற்பனை செய்தார்கள். அன்று பாமாயில் ரூ.52-க்கு விற்கப்பட்டது. ரேஷன் கடையில் தி.மு.க. ஆட்சியில் ரூ.30-க்கு விற்கப்பட்டது.

2013-ல் சிறப்பு பொது வினியோக திட்டத்தை மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு ரத்து செய்தது. ஆனால், அ.தி.மு.க. அரசு அமைந்த பின்னர், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் சிறப்பு பொதுவினியோக திட்டம் உள்ளது.

இன்று 1 கிலோ துவரம் பருப்பு ரூ.200-க்கு விற்ற வேளையிலும் ஒரு கார்டுக்கு ரூ.30-க்கு வழங்கப்படுகிறது. பாமாயில் லிட்டர் ரூ.87-க்கு விற்றபோதிலும், ரேஷன் கடையில் ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. சர்க்கரை (சீனி) வெளிமார்க்கெட்டில் கிலோ ரூ.45. ஆனால், ரேஷன் கடையில் கிலோ ரூ.25-க்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் எல்லாம் தி.மு.க. ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் பற்றி குறை கூறும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கொள்ளட்டும்.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாதிப்பு அ.தி.மு.க.வுக்கா? தி.மு.க.வுக்கா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ரஜினி, நாங்கள் எல்லாம் மதிக்கக்கூடியவர்.

நல்ல கலைஞர், சிறப்பாக நடிக்க கூடியவர். நல்ல கருத்துகளை சொல்லக்கூடியவர். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். கட்சி கொடியெல்லாம் அறிமுகம் செய்த பின்னர் கேள்வி கேட்டால் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story