சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை - மதுரையில் டி.டி.வி.தினகரன் பேட்டி


சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை - மதுரையில் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 7 Sept 2019 5:00 AM IST (Updated: 7 Sept 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

மதுரை,

பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் மூக்கையா தேவர் குருபூஜையையொட்டி, மதுரை அரசரடியில் உள்ள அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி மாவட்ட செயலாளர்கள் மகேந்திரன், ஜெயபால், ராஜலிங்கம் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிதலோடு செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது. ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ்-தி.மு.க. தான். ஆனால் தற்போது இந்த திட்டத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தி.மு.க. ஆட்சி என்பது அவர்களுடைய ஆசை. யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு நல்லாசிரியர் விருதை மறுக்க கூடாது. தமிழக அரசு தாய் உள்ளத்தோடு அவர்களை அணுக வேண்டும். முதல்-அமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு சென்றார் என்ற நிலை வந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story