நடத்தையில் சந்தேகப்பட்டு: மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


நடத்தையில் சந்தேகப்பட்டு: மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Sept 2019 4:45 AM IST (Updated: 8 Sept 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் சந்தேகப் பட்டு மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலு மகன் செல்லையா (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (26). செல்லையா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட தகராறின் போது, அவர் மனைவியை தனது வீட்டின் முன்பு வைத்து தாக்கி, அவருடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சுமதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சுமதியின் தாய் வேலுத்தாய் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி ஏ.கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.

மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த குற்றத்துக்காக செல்லையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து செல்லையாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
1 More update

Next Story