மும்பையில் நடந்த விழாவில் மோடியை புகழ்ந்த உத்தவ் தாக்கரே
மும்பையில் நடந்த விழாவில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி தவிர்க்க முடியாதது என்றும் கூறினார்.
மும்பை,
பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பிரச்சினை காரணமாக முறிந்தது. ஆனால் பா.ஜனதா அதிக தொகுதிகளை பிடித்து ஆட்சியமைத்ததும் அந்த அரசில் சிவசேனாவும் இணைந்துகொண்டது.
இருப்பினும் இரு கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பணிப்போர் நிலவி வருகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடிப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மும்பையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட மெட்ரோ ரெயில் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தனது மகத்தான ஆளுமை திறனை கொண்டு நாட்டை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கி வழிநடத்துகிறார். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்காகவும், சந்திராயன்-2 திட்டத்தை மேற்கொண்டதற்காகவும் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், அது அப்படியே இருக்கும். மோடி இதை வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் நிரூபித்துள்ளார்.
தற்போது அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்காகவும், பொது சிவில் திட்டத்துக்காகவும் மக்கள் காத்திருக்கின்ற னர்.
இந்தியாவுக்கு மகத்தான திறன் உள்ளது. பிரதமர் மோடியால், நாட்டை சரியான முறையில் வழிநடத்துவதற்கான தலைமை கிடைத்துள்ளது.
பா.ஜனதா, சிவசேனா கூட்டணி தவிர்க்க முடியாதது. எங்களுக்கு அதிகாரம் வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநில வளர்ச்சிக்கு நமக்கு இது தேவை. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி மாநிலத்தில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகளை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story