மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் மாநகராட்சி அறிவிப்பு


மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Sep 2019 10:30 PM GMT (Updated: 8 Sep 2019 4:35 PM GMT)

மரங்களை சேதமாக்கும் வகையில் விளம்பரப்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் பல்வேறு மரங்கள் நடப்பட்டு, மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயற்கைக்கு மாறாக மரங்களில் எவ்வித சேதமில்லாமல் பாதுகாக்கப்பட வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.

ஆனால் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அதன் விளம்பரங்களை அட்டை மற்றும் பலகைகள் போன்ற பொருட்களின் மூலம் மரங்களில் ஆணி அடித்து அல்லது கயிற்றால் கட்டி விளம்பரம் செய்து வருகிறார்கள். மேலும் மரங்களில் வர்ணங்கள் பூசியும், மின்சார அலங்கார விளக்குகளை அமைத்தும், கம்பிகள், கேபிள்கள் மற்றும் இதர பொருட்கள் மூலம் மரங்களை சேதமாக்கி வருகின்றனர்.

இதுபோன்ற இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளினால் மரங்கள் பட்டுப்போவதும், அதனுடைய வாழ்நாள் குறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேவையற்ற விளம்பர பலகைகள், மின்சார அலங்கார விளக்குகள், கேபிள்கள் மற்றும் இதர பொருட்களை 10 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் அவர்களாகவே அகற்ற வேண்டும்.

தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது ரூ.25 ஆயிரம் வரை அதிகபட்ச அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இது குறித்த புகார்களை பொதுமக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story