கூடலூர், பந்தலூர் பகுதியில் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன


கூடலூர், பந்தலூர் பகுதியில் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன
x
தினத்தந்தி 9 Sept 2019 4:00 AM IST (Updated: 9 Sept 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூர் பகுதியில் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

பந்தலூர்,

நாடு முழுவதும் கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். பந்தலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் பந்தலூர் ரிச்மென்ட் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.

பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்திற்கு செல்வகுமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்தன், செயற்குழு உறுப்பினர் ராஜா, விசுவ இந்து பரி‌‌ஷத் நிர்வாகிகள் யோகேஸ்வரன், ரமேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் சதீஸ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பா.ஜனதா கட்சி நெல்லியாளம் நகர நிர்வாகி தீபக்ராம், சுரேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 87 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக உப்பட்டி வழியாக பொன்னானி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், அதிவிரைவுப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதி‌‌ஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு வக்கீல் கருணாநிதி தலைமை தாங்கினார். கிஷோர்குமார், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் நளினி சந்திரசேகரன் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலம் கூடலூர் பஜார் வழியாக இரும்பு பாலம் ஆற்றை அடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதேபோல் மாலை 4 மணிக்கு விசுவ இந்து பரிசத் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமி தலைமையில் நடைபெற்றது. ஊர்வலம் கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கி கூடலூர் கோழிபாலம் வழியாக இரும்புபாலம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

ஊர்வலத்தை முன்னிட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்நிவாஸ், கோபி ஆகியோர் தலைமையில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங்க் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் நடுவட்டம் பகுதியில் 14 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு டி.ஆ.பஜார் ஆற்றில் கரைக்கப்பட்டன. 

Next Story