உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Sept 2019 3:45 AM IST (Updated: 9 Sept 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

தூத்துக்குடி,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சி மெச்சக்கூடிய ஆட்சியாக இல்லை. எந்த துறையிலும் முத்திரை பதிக்கவில்லை. வெறும் வெற்று கோஷம் வயிற்றை நிரப்பாது. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள் வேண்டும். இதனை மோடி அரசு செய்யவில்லை. பொருளாதாரத்தை பாழ்படுத்தி இருக்கிறார்கள்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மோட்டார் வாகன துறை சரிந்து விட்டது. ரிசர்வ் வங்கி உபரி நிதி பறிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் தமிழ் தெரிந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல், தமிழ் தெரியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள். காஷ்மீரில் எல்லோரையும் அடைத்து வைத்து இருக்கிறார்கள். இதைத்தான் அவர்கள் செய்து இருக்கிறார்கள்.

50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி இந்தியாவை ஒரு துணி போன்று அழகாக பிணைத்து வைத்து இருந்தது. ஆனால் பா.ஜனதாவினர் அதனை கிழித்து விட்டனர். நாடு ஆபத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் ஏதும் செய்யவில்லை. நாட்டின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமான விஷயத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர தவறான விஷயங்களில் அல்ல.

வெளிநாடு சென்று உள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் நலனுக்காக அதிக முதலீடுகளை ஈர்த்தார் என்றால் காங்கிரஸ் அதனை வரவேற்கும். அரசு செய்யும் நல்ல விஷயங்களை நாங்கள் விமர்சிக்க மாட்டோம். இருப்பினும் கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கேள்வித்தாளில் தலித், முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகள் இருந்தது. இது பா.ஜனதா கட்சியின் சனாதன ஆட்சி என்பதற்கு ஒரு உதாரணம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்க வேண்டும். அது இருபக்கமும் கூர்மையாக இருக்கும் கத்தி போன்றது. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லையெனில் அதன் பாதிப்பு அவர்களையே வந்து சேரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story