ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்தும் சூழல் உருவாக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்தும் சூழல் உருவாக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழகத்தில் சுமார் 200 திரைப்படங்கள் திரையிடப்பட முடியாமல் நிலுவையில் இருக்கின்றன. பெரிய திரையரங்குகளை 3 திரையரங்குகளாக மாற்ற அவற்றின் உரிமையாளர்கள் அனுமதி கேட்டுள்ளனர். இதனால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகமான படங்களை திரையிட முடியும் என கோரிக்கை வைத்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அப்போது அனைத்து திரைப்படங்களும் திரையிடப்படும் சூழல் உருவாகும். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் மூலம் அனைத்து திரையரங்குகளும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதை எப்படி கட்டுப்படுத்துவது? என நாங்கள் உள்துறை செயலாளரிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். திரைப்பட துறையும், உள்துறையும் இணைந்து இந்தியாவிலேயே முன்னோடியாக ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்துகின்ற சூழல் உருவாக்கப்படும். மொத்தத்தில் திரைப்படத்துறை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்ற நிலை விரைவில் உருவாக்கப்படும்.
மாவட்டம் தோறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மழை பெய்து கண்மாய், ஊருணிகளில் நீர் நிரம்பும் போது மக்கள் நேரடியாக அந்த பயனை அனுபவிக்கும் நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story