பஸ் கூண்டு கட்டியதற்கான தொகையை வழங்காமல் ரூ.8½ லட்சம் மோசடி, தந்தை-மகன்கள் மீது வழக்குப்பதிவு
கரூரில் பஸ் கூண்டு கட்டியதற்கான தொகையை வழங்காமல் ரூ.8½ லட்சம் மோசடி செய்த தந்தை-மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர் அதே பகுதியில் பஸ் கூண்டு கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கரூர் கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் கண்ணன் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (65). இவரது மகன்கள் ஆனந்த், அகிலன். தந்தை, மகன்கள் 3 பேரும் எங்களிடம் 3 பஸ்களுக்கு கூண்டு கட்ட ஒப்பந்தம் செய்தனர். ஒரு பஸ்சுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.22½ லட்சம் தொகை பேசப்பட்டது. இதில் ரூ.14 லட்சத்தை ராஜகோபாலும், அவரது மகன்களும் வழங்கினர். மீதமுள்ள ரூ.8½ லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெரிவித்திருந்தார். இது குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நாகர்கோவிலை சேர்ந்த ராஜகோபால், அவரது மகன்கள் ஆனந்த், அகிலன் ஆகிய 3 பேரும் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், தந்தை-மகன்கள் சேர்ந்து நாகர்கோவிலில் பஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story