சுயநிதி மீன்வள கல்லூரி அமைக்க எதிர்ப்பு, தூத்துக்குடியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்


சுயநிதி மீன்வள கல்லூரி அமைக்க எதிர்ப்பு, தூத்துக்குடியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2019 10:30 PM GMT (Updated: 9 Sep 2019 11:36 PM GMT)

சுயநிதி மீன்வள கல்லூரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் மீன்வள கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் சுயநிதி மீன்வள கல்லூரி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே மீன்வள கல்லூரியில் படித்து முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிக குறைவாகவே உள்ளதாகவும், இந்த நிலையில் சுயநிதி கல்லூரி பாடப்பிரிவை தொடங்குவதன் மூலம் மெரிட் மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு மனு அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்வள கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேரை கல்லூரி நிர்வாகம் விடுதியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் சுயநிதி மீன்வள பாடப்பிரிவு தொடங்க எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

Next Story