ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Sep 2019 10:00 PM GMT (Updated: 10 Sep 2019 7:09 PM GMT)

வயல்களில் வரப்பு கரை அமைக்க பணியாணை வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர், தொண்டப்பாடி, பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர். பின்பு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தங்களது வயல்களில் வரப்பு கரை அமைக்க பலமுறை மனு கொடுத்தும் பணியாணை கொடுக்காததை கண்டித்து

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம்) செல்வமணியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வயல்களில் வரப்பு கரை அமைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எங்களுக்கு பணியாணை வழங்கப்படவில்லை. மேலும் நாங்கள் மனு கொடுத்த பிறகு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்த பலருக்கு குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கு பணியாணை வழங்கி வேலைகள் நடந்துள்ளது. எனவே எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் வட்டார வளர்ச்சி அதிகாரி இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிதியாண்டில் வேலைகள் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story