வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் ஜெயங்கொண்டத்தில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக சென்னைக்கு செல்லும்போது சென்னையை சேர்ந்த வியாபாரியான பாஸ்கர் என்பவர் அறிமுகமானார்.
அப்போது அவரிடம் தனது ஜவுளிக்கடையை விரிவு படுத்த வங்கியில் கடன் வாங்கப்போவதாக முருகன் கூறியுள்ளார்.
இதனை பயன்படுத்திக்கொண்ட பாஸ்கர் தனக்கு பல வங்கி அதிகாரிகளை தெரியும், உங்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.50 கோடி வரை கடன் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் சக்திவேல், ரவிக்குமார் ஆகிய 3 பேர் முருகன் வீட்டிற்கு வந்து வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்தை முன்பணமாக வாங்கி சென்றனர். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வந்து ஜவுளிக்கடைக்குறிய ஆவணங்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என ரூ.66 லட்சம் பெற்றுக்கொண்டு சென்றனர். இதையடுத்து அவரிடம் இருந்து எந்த தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, இதுகுறித்து அரியலூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story