காரை ஏற்றி கொல்லப்பட்டவர் வழக்கில் திருப்பம், நண்பர் உள்பட 2 பேர் கைது - பணப்பிரச்சினையில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
சிவகங்கை அருகே காரை ஏற்றி கொல்லப்பட்டவர் வழக்கில் நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பணப்பிரச்சினையில் தீர்த்துக்கட்டியது விசாரணையில் அம்பலமானது.
சிவகங்கை,
மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). இவர் கடந்த 3-ந் தேதி அன்று சிவகங்கையை அடுத்த காரம்போடை கண்மாய் கரையில் காரை ஏற்றி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிண்டு அப்துல்கபூர், தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரிஉசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், பாண்டியராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் முத்துக்குமாரை, அவருடைய நண்பரான மதுரை கே.புதூரை சேர்ந்த முத்துபாண்டி (43) மற்றும் சிவகங்கையை அடுத்த எம்.வேலாங்குளத்தை சேர்ந்த சிவன் என்ற சிவசுப்பிரமணியன் (32) உள்பட 3பேர் சேர்ந்து மது குடிக்க வைத்து கொலை செய்தது தெரிந்தது.
அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த முத்துபாண்டி மற்றும் சிவன் என்ற சிவசுப்பிர மணியன் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரும் முத்துபாண்டியும் நண்பர்கள். முத்துக்குமார் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பின்பு, அவர் முத்துபாண்டியுடன் சேர்ந்து பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் பண விசயத்தில் இருவருக்கும் இடைய தகராறு ஏற்பட்டதாம். இதனால் முத்துபாண்டியை தன்னுடைய வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி மாலை சிவகங்கையை அடுத்த மதகுபட்டியில் வசிக்கும் ஒருவருக்கு பழைய காரை விற்க இருவரும் வந்தனர்.
இவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் சிவன், புகழ் ஆகியோர் வந்தனர். காரை விற்ற பின்பு, முத்துபாண்டி உள்பட 3 பேரும், முத்துக்குமாரை மது குடிக்க வைத்து, அவரை கம்பால் தாக்கி, அவரை காரம்போடை கண்மாய் கரைக்கு கொண்டு வந்து போட்டு, அவர் மீது காரை ஏற்றி கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய 2 கார்களையும், முத்துக்குமாரை தாக்க பயன்படுத்திய கம்பையும் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலூரை சேர்ந்த புகழ் என்ற புகழேந்தியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story