வாக்காளர் பட்டியலில் பெயர் விவரங்களை சரிபார்க்க வசதி - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் விவரங்களை சரிபார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை வாக்காளர் பட்டியலி்ல் தாங்களாகவே சரிபார்த்துக்கொள்வதற்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலை எந்தவிதமான தவறும் இல்லாத வகையில் தயாரிக்கும் வகையில் முன் திருத்தப்பணியாக கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணி வருகிற 30-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்படி வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக சரிபார்த்துக்கொள்ளலாம். பொது சேவை மையங்கள், மொபைல் செயலி, வாக்காளர் சேவை மையங்கள், மாவட்ட தொடர்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ஆகியவற்றின் மூலம் அறியலாம்.
இணையதளம், மொபைல் செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்தும் தங்களது பெயர் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி, தபால் அலுவலக கணக்கு புத்தகம், உழவர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், பிறந்தநாள் குறிப்பிட்ட 10-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், பான்கார்டு, வருமான வரி கணக்குகள், சமீபத்தில் செலுத்தப்பட்ட தண்ணீர்,தொலைபேசி, மின்சாரம், கியாஸ் இணைப்பு ஆகியவற்றுக்காக கட்டண ரசீது, தபால் அலுவலகம் மூலம் வீட்டு முகவரிக்கு வரப்பெற்ற கடிதங்கள் ஆகியவற்றில் ஒன்றை தங்கள் வீட்டுக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கொடுத்து வாக்காளர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். சரிபார்ப்பு பணியின்போது பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றம், திருத்தப்பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், சப்-கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் வாக்காளர் சேவை மையங்கள் செயல்படுகிறது. இந்த சேவை மையங்களுக்கும் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
வாக்காளர் சரிபார்ப்பு பணி நிறைவு பெற்ற பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய மனுக்கள் கொடுக்கலாம். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்துக்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், திருப்பூர் ஆர்.டி.ஓ. செண்பகவல்லி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story