ராஜபாளையம், அருப்புக்கோட்டையில், வீட்டுபூட்டை உடைத்து 72 பவுன் நகை கொள்ளை


ராஜபாளையம், அருப்புக்கோட்டையில், வீட்டுபூட்டை உடைத்து 72 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 10 Sep 2019 9:45 PM GMT (Updated: 10 Sep 2019 11:51 PM GMT)

ராஜபாளையம், அருப்புக்கோட்டையில் வீட்டுபூட்டை உடைத்து 72 பவுன் நகையை கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை,

ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள பண்டிட் சுப்பாராஜா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45). அரிசி வியாபாராம் செய்து வருகிறார். இவரது தாயார் நெல்லை மாவட்டம் சிவகிரியில் வசித்து வந்தார். அங்கு அவர் இறந்து விட்டதால் முருகன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சிவகிரிக்கு சென்று விட்டார்.

இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்தநிலையில் முருகன் மற்றும் குடும்பத்தினர் நேற்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பண்டிட் சுப்பாராஜா தெருவில் வீடுகள் அதிகம் உள்ள பகுதியாகும். மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இதனால் இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்தவர் பெத்துராஜ் (65). விவசாயியான இவருக்கு அதே ஊரில் செந்தமாக 2 வீடுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் இவரும் இவரது மனைவியும் தூங்கச்சென்று விட்டனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே இருந்த மரப்பெட்டியை உடைத்து அதிலிருந்த 42 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர். நேற்று காலை பூட்டியிருந்த வீட்டுக்கு பெத்துராஜ் சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பெத்துராஜ் பந்தல்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களையும் சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story