தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2019 10:45 PM GMT (Updated: 11 Sep 2019 6:48 PM GMT)

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அதனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும். வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதியை கண்டறிந்து, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கு இடவசதி மற்றும் முகாம்களுக்கு ஏற்பாடு செய்திடவேண்டும்.

இயற்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் தேவையான வயர்லெஸ் கருவிகளை இணைத்து பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் பராமரிக்கவும், உடைப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை சீரமைப்பதற்கு போதுமான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ குழுக்களை தயார்நிலையில் வைக்கவும், நோய்தடுப்பு மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவ குழுவை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை ஆகியவை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மழைமானிகளை பராமரித்து, தினந்தோறும் காலை 7 மணிக்குள்ளும், மாலை 3 மணிக்குள்ளும் மழை அளவினை கணக்கிட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அதிலிருந்து மீள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

மேலும், மழை சேதங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்-1077 மற்றும் தொலைபேசி எண்- 04546 261093, செல்போன் எண்-94877 71077 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, வன அலுவலர் கவுதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ.க்கள் ஜெயப்பிரீத்தா, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story