கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி- 11 பேர் மீது வழக்கு


கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி- 11 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Sept 2019 4:15 AM IST (Updated: 12 Sept 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

கடன் வாங்கி தருவதாக நாகர்கோவிலை சேர்ந்த டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 51), டாக்டர். அதே பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் இடலாக்குடி பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறேன். ஆஸ்பத்திரியை விரிவாக்கம் செய்வதற்காக திட்டமிட்டேன். அதற்கு தேவையான பணத்தை கடனாக பெறுவதற்கு முயற்சி செய்து வந்தேன். இதனை அறிந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அருள் முருகன், ஈரோட்டை சேர்ந்த அனிதா டேவிட் , கோவையை சேர்ந்த பாஸ்கர் உள்பட சிலர் என்னை சந்தித்து பேசினர். மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் அதிக பணம் கடனாக பெற்று தருவதாக கூறினார்கள். இதற்கு எங்களுக்கு கமிஷன் அடிப்படையில் பணம் தரவேண்டும் என்றனர்.

மேலும் என்னிடம் இருந்து ரூ.1 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்தையும், பூர்த்தி செய்யப்படாத 7 காசோலைகள் மற்றும் ரூ.50 கோடிக்கான கடன் பத்திரத்தையும் வாங்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் சொன்னபடி எனக்கு கடன் பெற்றுத் தரவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டனர்.

எனவே அருள் முருகன், அனிதா டேவிட், பாஸ்கர் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அருள் முருகன், அனிதா டேவிட் உள்பட 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story