மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி: திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜர் + "||" + Armed training at Kodaikanal mountain: 5 Maoists in Dindigul court Azar

கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி: திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜர்

கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி: திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜர்
கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில், திண்டுக்கல் கோர்ட்டில் 5 மாவோயிஸ்டுகள் ஆஜராகினர்.
திண்டுக்கல், 

கொடைக்கானல் வடகவுஞ்சி மலையில், கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில், நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார்.

மேலும் 2 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் வடகவுஞ்சி மலையில் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதோடு, மாவோயிஸ்டு இயக்கத்தில் சேரும்படி மலைவாழ் மக்களை மூளைச்சலவை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய 7 பேரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதில் ரஞ்சித், நீலமேகம் ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்றுவிட, 5 பேர் சிறையில் உள்ளனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் சிறையில் இருக்கும் ரீனாஜாய்ஸ்மேரி, மதுரை சிறையில் இருக்கும் செண்பகவல்லி, சேலம் சிறையில் இருக்கும் பகத்சிங் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதேபோல் ஜாமீனில் வெளியே இருக்கும் ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் ஆஜராகினர்.

ஆனால், கோவை சிறையில் இருக்கும் கண்ணன், கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் இருக்கும் காளிதாஸ் ஆகியோரை போலீசார் அழைத்து வரவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜமுனா உத்தரவிட்டார். மாவோயிஸ்டுகள் ஆஜரானதையொட்டி திண்டுக்கல் கோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.