சென்னையின் குடிநீர் தேவைக்காக: 20 நாட்களில் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் - அதிகாரி தகவல்


சென்னையின் குடிநீர் தேவைக்காக: 20 நாட்களில் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:45 PM GMT (Updated: 12 Sep 2019 6:54 PM GMT)

சென்னையின் குடிநீர் தேவைக்காக இன்னும் 20 நாட்களில் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

செங்குன்றம்,

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட கோரி தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

அதன்படி கடந்த 10-ந் தேதி சோமசீலா நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டலேறு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆனால் தற்போது 5 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு 8 முதல் 10 டி.எம்.சி.யாக அதிகரிக்கும்போது அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த நீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரியை சென்றடைய கிருஷ்ணா நதி கால்வாயில் வளர்ந்துள்ள முட்புதர்கள், செடிகளை அகற்றி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் ஹென்றிஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சுப்புராஜ், உதவி பொறியாளர்கள் சண்முகம், சதீஷ்குமார், பழனிகுமார், பிரதீஷ் ஆகியோர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் பகுதியை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அங்கு கிருஷ்ணா நதி கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் தலைமை பொறியாளர் அசோகன் கூறுகையில், ‘கண்டலேறு அணையில் இருந்து இன்னும் 20 நாட்களில் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. இந்த தண்ணீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரியை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தால் சென்னையில் குடிநீர் வினியோகம் சீராகும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.

Next Story