‘லிப்ட்’ கேட்டு ஏறிச்சென்றபோது பரிதாபம்: சாலையோர பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்து - பள்ளி மாணவன் சாவு
சாலையோர பள்ளத்தில் தண்ணீர் லாரி கவிழ்ந்தது. அதில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிச்சென்ற 9-ம் வகுப்பு மாணவர், லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தான்.
திருவொற்றியூர்,
மணலி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுடைய மகன் சியாம்(வயது 13). இவர், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
மணலி சாலையில் இருந்து பெரியார் நகருக்கு செல்ல பஸ் வசதி இல்லை. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்லவேண்டும். இதனால் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து மாணவன் சியாம், புத்தகப்பையை தோளில் சுமந்தவாறு பெரியார்நகர் சாலையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு தண்ணீர் லாரியை நிறுத்தி அதன் டிரைவரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறினான். சிறிதுதூரம் சென்றபோது, எதிரே ஒரு டிரைலர் லாரி வந்தது. இதற்காக தண்ணீர் லாரி டிரைவர் குபேந்திரன்(45) லாரியை ஓரமாக ஓட்டினார்.
எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் குபேந்திரன், அவரது இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த மாணவன் சியாம் இருவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
டிரைவர் குபேந்திரன் மட்டும் லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் வெளியே வந்து உயிர் தப்பினார். இதை பார்த்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.
அப்போது லாரிக்கு அடியில் சிக்கி மாணவர் சியாம் துடிதுடித்துக்கொண்டிருந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள், மாணவனை காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் அவர்களால் மாணவனை மீட்க முடியவில்லை. உடனே ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு லாரியை தூக்கி, மாணவனை மீட்டனர். ஆனால் அதற்குள் மாணவன் சியாம், அதே இடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டான்.
இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story