சாயல்குடி அருகே பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு அண்ணனை கொன்ற வாலிபர்


சாயல்குடி அருகே பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு அண்ணனை கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:30 PM GMT (Updated: 12 Sep 2019 11:15 PM GMT)

சாயல்குடி அருகே குடும்ப பிரச்சினையில் தலையில் கல்லைப்போட்டு அண்ணனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சாயல்குடி,

ராமநாதபுரம் அருகே சாயல்குடி பக்கம் உள்ள ஓடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் ராஜபாண்டி (வயது 32). இவரது மனைவி கலைச்செல்வி(27). இவர் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். ராஜபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்சமயம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.இவருக்கும், இவருடைய தம்பி திருச்செல்வத்திற்கும் (26) இடையே ஏற்கனவே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதனால் திருச்செல்வம் அண்ணன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராஜபாண்டி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற திருச்செல்வம், ராஜபாண்டியின் தலையில் கல்லை போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்து ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலிநோக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். ராஜபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி ராஜபாண்டியின் மனைவி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story