நாகர்கோவிலில் கருத்துக்கேட்பு கூட்டம்: சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு;வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு


நாகர்கோவிலில் கருத்துக்கேட்பு கூட்டம்: சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு;வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Sept 2019 5:15 AM IST (Updated: 13 Sept 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் அனைத்து வன பகுதிகளையும் ஒன்றிணைத்து “கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம்” என்று அறிவிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். மேலும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டல உத்தேச எல்லையும் வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது கடையல், திற்பரப்பு, தும்பகோடு, பொன்மனை, சுருளோடு, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, சிறமடம், வேளிமலை, அனந்தபுரம், அழகியபாண்டியபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, தேரூர், மருங்கூர், குலசேகரம் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் வரையறை செய்யப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.

வருவாய் அதிகாரி ரேவதி வரவேற்றார். வன அதிகாரி ஆனந்த் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் குறித்து வன அதிகாரி ஆனந்த் விளக்கம் அளித்தார். அப்போது, “சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் ஆறுகாணி பகுதியில் தொடங்கி காவல் கிணறு வரை செல்கிறது. இதில் சுங்கான்கடை, காவல் கிணறு ஆகிய இடங்களில் மட்டும் வனப்பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வரை விரிவுபடுத்த வரையறுக்கப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாக தான் விரிவாக்கம் செய்ய வரையறை செய்துள்ளோம். சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்குள் குவாரி அமைத்தல், வெடி மருந்து குடோன் அமைத்தல், கழிவுநீர் அதிகளவில் வெளியேற்றும் தொழிற்சாலை அமைத்தல், மர ஆலை மற்றும் செங்கல் சூளை அமைத்தல் உள்பட 7 விதமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுபோக பிற பணிகள் முறைப்படுத்தப்படும். வீடு கட்ட எந்த தடையும் இல்லை. இந்த பகுதிகள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வராது. பணிகளை முறைப்படுத்தி வன விலங்குகளை பாதுகாப்பதே இதன் நோக்கம் ஆகும்” என்றார்.

இதை தொடர்ந்து கட்சி, சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மக்கள் ஒவ்வொருவராக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

குமரி மாவட்டம் மிகவும் பரப்பளவு குறைந்த மாவட்டம் ஆகும். இங்கு மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். ஏற்கனவே தனியார் பாதுகாப்பு சட்டத்தால் மக்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இப்படி இருக்க சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தால் 17 கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயம், கால்நடைகள் வளர்ப்பு அனைத்தும் அழிக்கப்படும். மண்டலம் பகுதியில் வீடு கட்ட எந்த தடையும் இல்லை என்று அதிகாரி கூறுகிறார். ஆனால் தற்போது வனப்பகுதியில் வீடு கட்ட பொருட்கள் எடுத்து செல்ல வேண்டும் என்றால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. அதிலும் உடனே அனுமதி தந்து விட மாட்டார்கள். இதற்காக பல நாட்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே மண்டலமாக மாற்றினால் இது இன்னும் கடினம் ஆகிவிடும்.

குமரி மாவட்டத்தில் பாதிக்கு பாதி வனப்பகுதி இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் வசிக்கும் பகுதியையும் வனப்பகுதியாக மாற்றிவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள். வெறும் 25 புலிகள் வசிப்பதற்கு இவ்வளவு ஏக்கர் பரப்பை ஒதுக்குகிறீர்கள். மக்களை விட புலிகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே தடிக்காரன்கோணம், தோவாளை, செண்பகராமன்புதூர், வெள்ளமடம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்கு தொல்லை அதிகமாக இருக்கிறது. மேலும் பல இடங்களில் காட்டுப்பன்றி தொல்லையும் இருக்கிறது. வாழைகளை எல்லாம் இவை அழித்து விடுகின்றன.

ஆறுகாணி பகுதியில் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பகுதியை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்குள் கொண்டு வந்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே பெயர் அளவுக்கு கூட்டம் நடத்தாமல் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று மக்களை சந்திக்க வேண்டும். அப்போது சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை எடுத்துக் கூறவேண்டும். கிராம சபை கூட்டங்கள் நடத்தி கூட தெரிவிக்கலாம். மேலும் மண்டலம் பற்றிய விவரங்கள் அடங்கிய அறிவிக்கையை தமிழாக்கம் செய்து தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் 5 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக பேசியபோது, “சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைத்தால் என்ன பயன்? என்று முதலில் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி மக்களிடம் தெளிவாக புரிதல் ஏற்படுத்துதல் அவசியம். மக்களுக்காக இயற்றப்படுவது தான் சட்டமே தவிர, சட்டத்துக்கு ஏற்றார் போல மக்கள் வளைந்து கொடுக்க முடியாது.

காணி மக்கள் ஏற்கனவே காட்டுக்குள் செல்ல சிரமப்படுகிறார்கள். மண்டலம் அமைத்தால் அவர்கள் காட்டுக்குள் செல்ல முடியுமா? என்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்“ என்றனர்.

Next Story