வீடுகளில் நீர்வள மேலாண்மை தொழில்நுட்பங்கள் மூலம் மழைநீரை சேமிக்க வேண்டும் - கலெக்டர் கதிரவன் பேச்சு


வீடுகளில் நீர்வள மேலாண்மை தொழில்நுட்பங்கள் மூலம் மழைநீரை சேமிக்க வேண்டும் - கலெக்டர் கதிரவன் பேச்சு
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 PM GMT (Updated: 12 Sep 2019 11:17 PM GMT)

நீர்வள மேலாண்மை தொழில்நுட்பங்கள் மூலம் வீடுகளில் மழைநீரை சேமிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கதிரவன் பேசினார்.

கடத்தூர்,

கோபியில் மைராடா வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் மாவட்ட அளவிலான உழவர் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்வடிப்பகுதியின் மாதிரி வடிவமைப்புகளை திறந்து வைத்தார். மேலும் கண்காட்சியினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

நீர்பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு என்பது பாரம்பரிய மிக்கதாகும். இதர நீர்நிலைகள் மற்றும் ஏரிகள் புனரமைப்பு, ஆழ்துளை கிணறு மறுபயன்பாடு செய்தல் போன்றது முக்கிய அம்சங்களை கொண்டது ஆகும். நீர்வள மேலாண்மை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடுகளில் மழைநீரை சேமிக்க வேண்டும்.

தடுப்பணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை நிலங்கள் மற்றும் நீர்வடிப்பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தினால் நீர் மேற்கொண்டு வழிந்தோடாமல் சேமிக்கலாம். பண்ணைக்குட்டைகள் மூலமும் சாகுபடி நிலங்களில் தண்ணீரை சேமிக்கலாம். நீர்வரத்து உள்ள பகுதிகளில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்தி தடுப்புகள் மூலமும், ஆழ்குழாய் கிணறுகளில் அருகில் குழிகள் அமைத்தும் தண்ணீரை சேமித்து நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்யலாம்.

கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, வேளாண்மைக்கு பயன்படுத்தலாம். மேலும் தனியார் நிலங்களில் சமுதாயக்காடுகளை உருவாக்கி நீர் மற்றும் மண் வளத்தை பாதுகாக்கலாம். இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

விழாவில், நீர்பாதுகாப்பு தொடர்பாக நடந்த பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வேளாண்மை அதிகாரிகள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story