நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய கோழிப்பண்ணை அதிபர் கொலையில் 6 பேரை பிடித்து விசாரணை


நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய கோழிப்பண்ணை அதிபர் கொலையில் 6 பேரை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 7:40 PM GMT)

நெல்லை அருகே கோழிப்பண்ணை அதிபர் கொலையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம், 

நெல்லை அருகே கோழிப்பண்ணை அதிபர் கொலையில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோழிப்பண்ணை அதிபர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரத்தை அடுத்த நாணல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் இசக்கிபாண்டி (வயது 27). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் இவர் வல்லநாட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு புறப்பட்டு சென்றார். நெல்லை அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை அடுத்த அகரம் விலக்கு அருகில் சென்றபோது, அங்கு மறைந்து இருந்த மர்மகும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து இசக்கிபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

போலீசார் குவிப்பு

நெல்லை-தூத்துக்குடி நாற்கரசாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட இசக்கிபாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட இசக்கிபாண்டியின் உடலில் 15-க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், இசக்கிபாண்டி மீது எந்த வழக்கும் கிடையாது என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவத்தால், வல்லநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

4 தனிப்படைகள் அமைப்பு

கொலையாளிகளை பிடிப்பதற்காக முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ் நாராயணன், சுரேஷ்குமார், இசக்கிராஜா உள்ளிட்டவர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இசக்கிபாண்டியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இசக்கிபாண்டியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவருடைய உறவினர்கள், பொதுமக்கள் நேற்று காலையில் அகரம் விலக்கு நாற்கரசாலை அருகில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மதியம் அனைவரும் கலைந்து சென்றனர்.

6 பேரிடம் விசாரணை

இந்த நிலையில் இசக்கிபாண்டி கொலை தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இசக்கிபாண்டியிடம் செல்போனில் பேசியவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து அதன் அடிப்படையிலும் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

Next Story