சாக்கடை பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, தேனி கோர்ட்டு தீர்ப்பு


சாக்கடை பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை, தேனி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 7:46 PM GMT)

சாக்கடை பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி,

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (வயது 26). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மனோகரன் (39) என்பவருக்கும் இடையே சாக்கடை கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. எனவே இந்த பிரச்சினை தொடர்பாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சின்னையன் அதே ஊரில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மனோகரன், அவருடைய தம்பிகள் வைரவன் (37), வைரமுத்து (34) ஆகியோர் வழிமறித்து தாக்கினர். மேலும் அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சின்னையனை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த சின்னையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சின்னையனின் மனைவி விஜயலட்சுமி ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரன், வைரவன், வைரமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெள்ளைச்சாமி ஆஜராகினார்.

வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி விவசாயி சின்னையனை கொலை செய்த மனோகரன், வைரவன், வைரமுத்து ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 7 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story