தரமான விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
தரமான விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடியினை பொறுத்தவரை நேரடி நெல்விதைப்பு முறை, நெல் நாற்று நடவு முறை என இரண்டு முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. நேரடி நெல்விதைப்புக்கு வயலை டிராக்டர் மூலம் உழவு செய்து நெல் விதைப்பு செய்கின்றனர். நடவு முறைக்கு நாற்றங்கால்கள் தயாரித்து அதில் நெல் விதைத்து நாற்றுகள் தயாரிக்கிறார்கள்.
தற்போது நேரடி நெல் விதைப்பில் 75 சதவீதம் இடங்களிலும், நடவு முறையில் 60 சதவீத இடங்களிலும் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நெல்விதைப்புக்கு வயலை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நெல் விதைப்புக்கு தேவையான விதை நெல் வாங்குவதில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
விதை நெல்லை பொறுத்தவரை அரசு விற்பனை நிலையங்கள் மூலம் 25 சதவீத விதை நெல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவது வழக்கம். விவசாயிகள் சொந்தமாகவே விதைநெல் வைத்திருப்பது வழக்கம் என்பதால் குறைவான அளவே விதைநெல் அரசால் விற்பனை செய்யப்படும். தற்போது சில ஆண்டுகளாக நிலையற்ற சாகுபடி சூழல்களால் பெரும்பாலான விவசாயிகள் விதைநெல் இருப்பு வைத்துக் கொள்வதில்லை. இதனால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைநெல்லுக்காக தனியார் நிறுவனங்களையே நாட வேண்டியுள்ளது. சில நேரங்களில் தனியாரிடம் வாங்கும் விதைநெல் தரமற்ற விதைகளாக இருப்பதால் சாகுபடி பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரடாச்சேரி ஒன்றியம் நீலனூர், கொடிமங்கலம், திருமதிகுன்னம் உள்ளிட்ட இடங்களில் தரமற்ற விதைகளால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இயல்பாக நாற்று வளர்ந்து தரமற்ற விதை என்று தெரியவந்ததால் விவசாயிகளுக்கு பெரு நஷ்டம் ஏற்பட்டது.
அதனால் இந்த ஆண்டு தனியார் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் நெல்விதை சான்று பெற்றதாக உள்ளதா என்பதை வேளாண்துறை அதிகாரிகள் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து தரமான விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story