வனச்சரணாலயங்கள் குறித்த வழக்கு: கிராமம் தோறும் கருத்துகேட்டு முடிவெடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வனச்சரணாலயங்கள் குறித்த வழக்கு: கிராமம் தோறும் கருத்துகேட்டு முடிவெடுக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 7:46 PM GMT)

வனச்சரணாயங்களை சுற்றிலும் உணர்திறன் பகுதியை குறைப்பது தொடர்பாக அனைத்து கிராம மக்களிடமும் கருத்து கேட்டு முடிவெடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த சதீ‌‌ஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை, கடல், நிலம் என அனைத்து இயற்கை அமைப்புகளும் உள்ளன. அங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு அரிய வகை உயிரினங்களும், தாவரங்களும் உள்ளன. உலகமயமாதல், வெப்பமயமாதல் காரணமாக வனங்கள் அழிந்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று என யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மூலமாக பெரும்பாலான பகுதிகளில் மழை கிடைக்கிறது.

இந்தநிலையில் கூடுதல் கவனம் செலுத்தி, அவற்றை பாதுகாக்க வேண்டும். இதற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, அவற்றை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் தூரத்தை சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் தமிழக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் தலைமை காப்பாளர், பாதுகாக்கப்பட்ட வனங்களில் அமைந்துள்ள சரணாலயங்களை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூழல் உணர்திறன் மண்டலத்தை 3 கிலோ மீட்டர் அளவாக குறைக்க திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி உள்ள திற்பரப்பு, தும்பக்கோடு, அனந்தபுரம், மருங்கூர் உள்ளிட்ட 17 கிராம மக்களிடம் பொது கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால் இது தொடர்பான அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை. பெயரளவுக்கு கடந்த 4-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டு, 12-ந்தேதி (நேற்றுமுன்தினம்) கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் அளித்த மனு மீது நடவடிக்கையும் இல்லை. எனவே விதிகளை பின்பற்றி, அனைத்து கிராமங்களை சேர்ந்தவர்களிடமும் கருத்து கேட்டு முடிவு எடுக்கவும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிடவும் வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடே‌‌ஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த முடிவும் எடுக்கவில்லை“ என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின்படி ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனியே கருத்து கேட்புக்கூட்டம் நடத்தி முடிவு எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். 

Next Story