கூடலூர்- பந்தலூர் வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு
கூடலூர்-பந்தலூர் வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூடலூர்,
கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 2½ லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த தொகுதியின் தலைமையிடமாக கூடலூர் உள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகம், வன அலுவலர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சட்டமன்ற அலுவலகம் உள்பட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. இதுதவிர அரசு கல்லூரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து 50 பஸ்கள் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
கூடலூரில் இருந்து பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான சேரம்பாடி, சேரங்கோடு, கொளப்பள்ளி, எருமாடு, பிதிர்காடு, நெலாக்கோட்டை, பாட்டவயல் ஊர்களும், ஏராளமான குக்கிராமங்களும் உள்ளன. மலைப்பிரதேசம் என்பதால் அனைத்து கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்குவது இல்லை. இதனால் முக்கிய ஊர்களுக்கு மட்டும் பஸ்கள் செல்கிறது. இதனால் அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பொதுமக்கள் தனியார் வாகனங்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி உள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பந்தலூர் பகுதியில் இருந்து வந்து செல்கின்றனர். இதற்காக தமிழக அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது. இதனால் காலை, மாலை வேளைகளில் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்யும் நிலை உள்ளதாக பெற்றோர், பொதுமக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி செயல்படும் நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க ப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து உள்ளனர். குறிப்பாக பந்தலூர் பகுதியில் இருந்து கூடலூருக்கு அதிகளவு பஸ்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். குறைவான பஸ்களை இயக்குவதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்டக்குன்னு பகுதியை சேர்ந்த ஆனந்த் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் பல குக்கிராமங்கள் உள்ளது. தினமும் ஏராளமான மாணவ- மாணவிகள் சில கி.மீட்டர் தூரம் நடந்து பாண்டியாறு குடோன் பகுதிக்கு வருகின்றனர். மழை அல்லது வெயில் காலங்களாக இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடந்து வருகின்றனர். சில சமயங்களில் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. பாண்டியாறு குடோன் பகுதிக்கு வந்து மாணவ-மாணவிகள் கூடலூர் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர்.
பந்தலூர் பகுதியில் இருந்து கூடலூர் நோக்கி வரும் பஸ்கள் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பி இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் நெருக்கடிக்கு மத்தியில் பயணம் செய்து பள்ளிக்கூடங்களுக்கு சென்று திரும்புகின்றனர். இதில் மாணவிகள் படும் அவதி சொல்லி மாளாது. சில சமயங்களில் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். மாணவ-மாணவிகளின் நலன் கருதி காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்கள் இயக்கினால் நல்லது. இது சம்பந்தமாக பல்வேறு முகாம்களில் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தீர்வு காணப்பட வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சமூக ஆர்வலர் மோகன் கூறியதாவது:-
கூடலூரில் இருந்து நெலாக்கோட்டை, பாட்டவயல் வழியாக பஸ்கள் போதிய அளவு இயக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு பஸ் புறப்படுகிறது. இதில் பயணிகள், மாணவ-மாணவிகள் என கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. அதன்பின்னர் இரவு 8 மணிக்கு தான் பஸ் உள்ளது. சுமார் 2 மணி நேரம் கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு பஸ் கிடையாது.
இந்த நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழைய பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகுகிறது. எனவே பழுதடைந்த பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் கூறியதாவது:-
கூடலூர்- பந்தலூர் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் போதிய பஸ்கள் இல்லாததால் மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நாடுகாணி, தேவாலா பகுதி மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிக்கு செல்வதற்கு சாலையோரம் நீண்ட நேரம் காத்து கிடக்கும் சூழ்நிலை காணப்படுகிறது.
பந்தலூரில் இருந்து பயணிகள், மாணவ-மாணவிகள் கூட்டம் நிரம்பி வழிகின்ற நிலையில் நாடுகாணி, தேவாலா பகுதி மாணவ-மாணவிகள் பஸ்களில் ஏறி கூடலூருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. போக்குவரத்து கழகம் வருவாயை ஈட்ட வேண்டும் என நிர்பந்தப்படுத்துவதால் இலவச பஸ் பாஸ்களை வைத்திருக்கும் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்வதற்கு போதிய அக்கறை காட்டுவது இல்லை. மேலும் குறைந்த அளவு பஸ்களை இயக்குவதால் மாணவ-மாணவிகள் வேறு வழியின்றி நெருக்கியடித்தும், முண்டியத்தும் பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். இதனால் பயணிகளும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில் விசாரித்தபோது, கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகளுக்கு இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் வசதிக்காக போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்னும் எந்த இடங்களில் பஸ் வசதி தேவைப்படுகிறது என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story