திருமானூர் அருகே, தொகுப்பு வீடு இடிந்து விழுந்து தொழிலாளி பலி - பொதுமக்கள் அச்சம்
திருமானூர் அருகே அரசு சார்பில் கட்டப்பட்ட தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். இதனால் மற்ற தொகுப்பு வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் அரசு சார்பில் கடந்த 1989-ம் ஆண்டு இந்திரா நினைவு திட்டத்தின் கீழ் 40 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. தற்போது அந்த 40 வீடுகளும் மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த தொகுப்பு வீடுகளில் ஒரு வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்ததில் வீட்டின் உரிமையாளர் ஜெயசீலன்(வயது 42) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு கோமதி என்ற மனைவியும், ஜெயபிரகாஷ்(16) என்ற மகனும், ஜெயமாலினி(13) என்ற மகளும் உள்ளனர். ஜெயசீலன் அவரது குடும்பத்தோடு அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மழை பெய்ததையடுத்து தொகுப்பு வீடு சேதமடைந்த நிலையில் இருந்ததால் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பக்கத்து வீட்டில் உறங்க சொல்லிவிட்டு ஜெயசீலன் அதே வீட்டில் காவலுக்காக உறங்கியுள்ளார். அப்போது இரவு 11:30 மணியளவில் எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்க்கையில் இடிபாடுகளில் சிக்கி ஜெயசீலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீதமிருக்கும் தொகுப்பு வீடுகளில் வசித்து வரும் குடும்பங்களும் வீட்டிற்கு வெளியே சமைப்பதும், உறங்குவதுமாக இருந்து வருகின்றனர்.
இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அரசு கூடிய விரைவில் நடவடிக்கை எடுத்து புதிதாக வீடுகளை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், முன்னதாகவே 20 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கு என நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் இருப்போருக்கும் கூடிய விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு வீடு கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story