அண்ணா பிறந்தநாள் : சேலத்தில் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி


அண்ணா பிறந்தநாள் : சேலத்தில் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 8:33 PM GMT)

சேலத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது.

சேலம்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு அரசு சார்பில் சைக்கிள் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பில் சேலத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த சைக்கிள் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சேலம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து கலந்து கொண்டு சைக்கிள் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் போட்டியானது, காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கி, தமிழ்ச்சங்கம், அண்ணா பூங்கா வழியாக மீண்டும் காந்தி மைதானத்தை வந்தடைந்தது.

முடிவில், 13-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் கீர்த்திகா முதல் பரிசும், கவுசிகா 2-ம் பரிசும், சாதனா 3-ம் பரிசும் பெற்றனர். 15 வயதுக்குட்பட்ட பிரிவில் சோபிகா முதல் பரிசும், யுவராணி 2-வது பரிசும், மகாஸ்ரீ 3-ம் பரிசும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சவுமியா முதல் பரிசும், திவ்யா 2-ம் பரிசும், காவியா 3-ம் பரிசும் பெற்றனர்.

இதேபோல், 13-வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கண்ணன் முதல் பரிசும், ரோகித் 2-ம் பரிசும், யோகேஷ் 3-ம் பரிசும், 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சுகன் முதல் பரிசும், மகேஷ் 2-ம் பரிசும், வாஜித் 3-ம் பரிசும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சந்தோஷ் முதல் பரிசும், பாரதி 2-ம் பரிசும், மோகன்ராஜ் 3-ம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ஜெய்சந்த்லோடா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

Next Story