நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைப்பு சாலைக்காக ஆக்கிரமிப்பு கடை - வீடுகள் இடிப்பு


நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைப்பு சாலைக்காக ஆக்கிரமிப்பு கடை - வீடுகள் இடிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 8:57 PM GMT)

நெல்லை சந்திப்பில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைப்பு சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

நெல்லை, 

நெல்லை சந்திப்பில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைப்பு சாலை அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

இணைப்பு சாலை

நெல்லை மாநகர பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க நெல்லை தாமிரபரணி ஆற்றில் தற்போது புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் கட்டும் பணி முடிவடைந்து விட்டது.

தற்போது அந்த பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதற்காக அந்த சாலையில் நெல்லை சந்திப்பு முத்துராமலிங்கதேவர் சிலை அருகில் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் பெற்றுக்கொண்டவர்கள் கடைகள், வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதைத்தொடர்ந்து நெல்லை கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மாலிக், கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர்கள் டேனியல், வேலாயுதம் மற்றும் ஊழியர்கள் நேற்று நெல்லை சந்திப்பில் தேவர் சிலை அருகில் ஆக்கிரமிப்பில் இருந்த 10 கடைகள், 4 வீடுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். மேலும் சில கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள்.

இதையொட்டி அந்த பகுதியில் நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜனகன், அலெக்சாண்டர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story