பல்லடம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்


பல்லடம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Sep 2019 9:45 PM GMT (Updated: 13 Sep 2019 10:19 PM GMT)

பல்லடம் அருகே சாலையோரம் மினிபஸ் கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காமநாயக்கன்பாளையம், 

பல்லடம் அருகே உள்ள வலையபாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி நேற்றுகாலை 8 மணிக்கு மினிபஸ் ஒன்று புறப்பட்டது. அந்த மினி பஸ்சை துத்தாரிபாளையத்தை சேர்ந்த அருண் (வயது 28) என்பவர் ஓட்டினார். நடத்துனராக பிரபாகரன் இருந்தார். இந்த மினி பஸ் வலையபாளையத்தில் இருந்து புறப்பட்டு நல்லாகவுண்டன்பாளையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அப்போது எதிரே மற்றொரு மினி பஸ் வந்தது. அந்த மினி பஸ்சுக்கு வழி விடுவதற்காக அருண் தான் ஓட்டிச்சென்ற பஸ்சை சாலை ஓரமாக திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் அருண் ஓட்டிச்சென்ற மினிபஸ் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா என்று கூச்சல் போட்டனர்.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த தொத்தம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (54), சுமதி (25), வலையபாளையத்தை சேர்ந்த முத்துலட்சுமி (25), அருக்காணி (35), சரஸ்வதி (35) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story