உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு தண்டனை - உதவி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனங்களை ஓட்டினால் அவர்களின் பெற்றோர்களுக்கு தான் தண்டனை வழங்கப்படும் என விருதுநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்தார்.
விருதுநகர்,
சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பயிற்சி நிலைய துணை முதல்வர் ரெகுராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் விருதுநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மனித உயிர் என்பது விலை மதிப்பு இல்லாதது. விபத்துகள் என்பது திடீரென ஏற்படுவதாகும். சாலைவிதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தவிர்க்க முடியும். எனவே பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும். வாகனங்களை வைத்திருப்போர்கள் காப்பீடு செய்வது அவசியம். பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பற்றி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் அவர்களது பெற்றோர்கள் தான் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
சாலை விதிகளை பின்பற்றி விருதுநகர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட மாணவர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து கருத்தரங்கில் பேசிய வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோ கூறியதாவது:-
மாணவர்களுக்கு சாலை விதிகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். மேலும் வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும். பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் பஸ்களில் செல்லும்போது படிக்கட்டுகளில் பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
வாகனங்களில் செல்லும்போது முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களை மதித்து செல்ல வேண்டும். இல்லையேல் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை விருதுநகர் சரக போலீஸ் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், கோட்டையூர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொண்டு நிறுவனம் செய்து இருந்தன.
இதில் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், போக்குவரத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story