மதுரையில் பலத்த மழை: மீனாட்சி அம்மன் கோவில் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது - 15 மோட்டார் சைக்கிள்கள் சேதம்


மதுரையில் பலத்த மழை: மீனாட்சி அம்மன் கோவில் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது - 15 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x
தினத்தந்தி 14 Sept 2019 4:45 AM IST (Updated: 14 Sept 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பெய்த மழையால் மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் 15 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

மதுரை, 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே குன்னத்தூர் சத்திரம் உள்ளது. அதன் அருகே தனியாருக்கு சொந்தமான 2 தளங்கள் கொண்ட மிகவும் பழமையான கட்டிடம் பூட்டியே கிடந்தது. அந்த கட்டிடத்தின் முன்புள்ள இடத்தில் நடைபாதையும், மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைப்பதற்கான இடமும் உள்ளது. அந்த இடத்தில் அங்குள்ள கடைக்காரர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் பழமையான அந்த கட்டிடத்தின் 2 தளங்களும் இடிந்து விழுந்தன.

இதனால் அதன் இடிபாடுகள் அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது விழுந்தன. இதில் 15-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. அதுபோல், அங்கிருந்த மின்கம்பிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில், மின்கம்பிகளும் அறுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், அந்த வழியாக வந்த வானங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திடீர்நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு படை வீரர்கள் வந்தனர். அவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் நேரவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story