சுள்ளான் ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
சுள்ளான் ஆற்றில் சம்பா சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்,
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தின் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்று சுள்ளான் ஆறு ஆகும். இதன் மூலம் 1,936 எக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு கல்லணையில் இருந்து காவிரி, அதன் துணை ஆறுகளான வெட்டாறு, வெண்ணாறு உள்பட பல ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இன்னும் சுள்ளான் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
எனவே சுள்ளான் ஆறு மூலம் பாசன வசதி பெறக்கூடிய பாபநாசம் மற்றும் வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட புரசக்குடி, வேம்பகுடி, அகரமாங்குடி, சோலை பூஞ்சேரி, பொன்மான் மேய்ந்தநல்லூர், மட்டையான் திடல், மேலசெம்மங்குடி, வளத்தாமங்களம், வடக்கு நாயகம்பேட்டை, தெற்கு நாயகம்பேட்டை, மதகரம் உள்பட பல கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் சம்பா பருவத்திற்கான விவசாய பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
தற்போது காவிரி மற்றும் கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வீணாக கடலுக்கு செல்லக்கூடிய நிலையில் சுள்ளான் ஆற்றில் இதுவரை தண்ணீர் திறந்துவிடபடாமல் இருந்து வருவதற்கு விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே வறண்டு கிடக்கும் சுள்ளான் ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story