சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் பலி; 11 பேர் படுகாயம் பட்டாசு ஆலை வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்


சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் பலி; 11 பேர் படுகாயம் பட்டாசு ஆலை வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 1:55 PM GMT)

சாத்தூர் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையை அடுத்துள்ள சல்வார்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று உள்ளது. அந்த ஆலையில் சூர்நாயக்கன்பட்டி, சல்வார்பட்டி, மாரனேரி, சுப்பிரமணியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பட்டாசு ஆலைக்கு சொந்தமான மினி வேனில் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

அதன்படி நேற்றும் வழக்கம்போல் பட்டாசு ஆலை வேன் சில கிராமங்களுக்கு சென்று, தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சூர்நாயக்கன்பட்டிக்கு வந்தது. அங்கும் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சல்வார்பட்டிக்கு புறப்பட்டது. வேனை இடையபொட்டல்பட்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக்ராஜா (வயது 40) ஓட்டினார். இந்த வேன் சாத்தூர்–தாயில்பட்டி ரோட்டில் உள்ள சுப்பிரமணியபுரம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது ஒரு வளைவில் திரும்பியபோது அந்த வழியாக மற்றொரு வேன் வந்தது. இதனால் பட்டாசு ஆலை வேனின் டிரைவர் கார்த்திக்ராஜா உடனடியாக பிரேக் போட்டார். இதனால் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து அந்த வேன் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.

வேனுக்குள் இருந்த பட்டாசு ஆலை ஊழியர்கள் அலறினார்கள். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து, வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசாரும் விரைந்து வந்தனர்.

இதில் குருமுத்து அம்மாள்(வயது 50), துரை பாண்டி(19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

படுகாயம் அடைந்த டிரைவர் கார்த்திக்ராஜா உள்பட மற்ற அனைவரும் உடனடியாக சாத்தூர், சிவகாசி, மதுரை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதில் கார்த்திக்ராஜா சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும், சுந்தரமூர்த்தி(32) என்பவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த சசிகலா, முனியாண்டி, பஞ்சவர்ணம், செல்லபாண்டி, நதிக்குதியை சேர்ந்த பூமாரி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வீரபெருமாள், முனீஸ்வரன் உள்பட 11 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கவிழ்ந்த வேனின் அருகே தொழிலாளர்கள் மதிய உணவுக்காக கொண்டு வந்த சாப்பாடு கூடைகள், டிபன் பாக்ஸ்கள், உபகரணங்கள் சிதறி கிடந்தன.

விபத்து குறித்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வெம்பக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேன் கவிழ்ந்து 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story