தான் வீசிய வலையிலேயே சிக்கி தொண்டி மீனவர் சாவு; நடுக்கடலில் பரிதாபம்


தான் வீசிய வலையிலேயே சிக்கி தொண்டி மீனவர் சாவு; நடுக்கடலில் பரிதாபம்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:45 AM IST (Updated: 14 Sept 2019 9:08 PM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் தான் வீசிய வலையிலேயே சிக்கி தொண்டி மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி படையாச்சி தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் வெங்கடேசுவரன்(வயது 21). மீனவரான இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பைபர் படகில் தனியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அவர் படகில் நின்றவாறு வலையை நடுக்கடலில் வீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துவிட்டார். இதனால் தப்பிக்க வழியின்றி மூச்சு திணறி பலியானார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய வெங்கடேசுவரன் நீண்டநேரமாகியும் வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் கடலுக்கு சென்று தேடினர். அப்போது அவர் சென்ற படகு மட்டும் நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்தது.இதையடுத்து அங்கு தேடிப்பார்த்த போது வெங்கடேசுவரன் வலையில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது உடலையும், படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் ராக்கம்மாள் புகார் செய்தார். அதனை தொடர்ந்து, வெங்கடேசுவரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story