கல்பாக்கம் அருகே கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


கல்பாக்கம் அருகே கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 4:07 PM GMT)

கல்பாக்கம் அருகே உள்ள கடலோர கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சிக்குட்டது உய்யாலிக்குப்பம் கடலோர கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடலில் சென்று மீன்பிடிப்பதே இப்பகுதியினரின் முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆவேசமாக எழும் கடல் அலைகள் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருக்கும் கரை வரை வந்து செல்கிறது. இதனால் இங்கு தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதி வரை கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பெரும்பாலான மீனவர்கள் கடல் சீற்றத்தால் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாத நிலை உள்ளது.

கடல் அரிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் கேட்ட போது, ஆண்டு தோறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இப்பகுதியில் கடல் அரிப்பு அதிகமாக காணப்படும். மீன்பிடி துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகள் என 130 படகுகளை கடலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி இருந்தோம். நாளுக்கு நாள் கடல் அரிப்பு ஏற்படுவதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாத நிலையில் உள்ளோம். கடலோரத்தில் வலைகள் உலறவைப்பதற்கான 2 கூடங்கள் உள்ளன. இந்த கூடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளன. கடலுக்கும் நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கும் இடையே வெறும் 50 மீட்டர் தான் இடைவெளி உள்ளது.

இதனால் வரும் நாட்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டதில், 100 வீடுகள் கடலுக்குள் மூழ்கின. இங்கு தினமும் 6 மணி நேரம் கடல் உள்வாங்குகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் கடல் அலை சீற்றத்துடன் கரையை நோக்கி வருகிறது. எனவே கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்த தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட கலெக்டர் இப்பகுதியை உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு தூண்டில் வளைவு ஏற்படுத்தி எங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

Next Story