நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு மத்திய அரசை குறை சொல்வது தவறு கருத்தரங்கில் அமைச்சர் பேச்சு


நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு மத்திய அரசை குறை சொல்வது தவறு கருத்தரங்கில் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 15 Sept 2019 4:30 AM IST (Updated: 14 Sept 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு மத்திய அரசை குறை சொல்வது தவறு என்று நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டம் மிக சிறிய மாவட்டமாகவும், கல்வி அறிவு கொண்ட மாவட்டமாகவும் இருந்து வருகிறது. தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி செய்யும் நிறுவனம் கூடிய விரைவில் அமைக்கப்படும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ரூ.270 கோடிக்கு கடன் உதவி

குமரி மாவட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் தொழில் தொடங்க முன்வர வேண்டும். தமிழக இளைஞர்கள் வேலை தேடி செல்லாமல், வேலை கொடுக்கும் அளவிற்கு தங்களது தொழில் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் தமிழகத்தில் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் முக்கிய பங்காகும். திறன் மேம்பாட்டு பயிற்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் 20 சதவீதம் தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள். பிற மாவட்டங்களை விட குமரி மாவட்டத்துக்கு கல்வியிலும், இயற்கை வளங்களிலும் தனி சிறப்பு உள்ளது. தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும். தற்போது ரூ.270 கோடிக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பேட்டி

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, மத்திய அரசின் நடவடிக்கையால் உலக அளவில் இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாக குறை சொல்வது தவறானது. கூடிய விரைவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

இந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டால் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடும் தமிழகத்திற்கு வந்துள்ளது. முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8 ஆயிரத்து 835 கோடிக்கு முதலீடு வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

கருத்தரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் ஆலோசகர் சண்முகநாதன், குமரி மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண் தங்கம் மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story