துமகூரு அருகே ஓடும் தனியார் சொகுசு பஸ்சில் திடீர் தீ பெண் உள்பட 6 பேர் தீக்காயம்


துமகூரு அருகே ஓடும் தனியார் சொகுசு பஸ்சில் திடீர் தீ பெண் உள்பட 6 பேர் தீக்காயம்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:15 PM GMT (Updated: 14 Sep 2019 6:05 PM GMT)

துமகூரு அருகே நேற்று அதிகாலையில் ஓடும் தனியார் சொகுசு பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

துமகூரு, 

துமகூரு அருகே நேற்று அதிகாலையில் ஓடும் தனியார் சொகுசு பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் பெண் உள்பட 6 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தனியார் சொகுசு பஸ்சில் தீ

விஜயாப்புராவில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று முன்தினம் இரவு தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் புறப்பட்டது. நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் 30 பயணிகளுடன் துமகூரு புறநகர் உருகெரே அருகே வந்தபோது பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

அதைத்தொடர்ந்து டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் உடனடியாக பஸ்சில் இருந்து வேகமாக இறங்கினர். இந்த வேளையில் சிலர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து அதன் வழியே வெளியே குதித்தனர். இதற்கிடையே, பஸ்சில் பிடித்த தீயானது வேகமாக பரவியது. இதனால் பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

6 பேர் தீக்காயம்

முன்னதாக, பஸ்சில் இருந்து இறங்கியபோது 6 பயணிகள் தீக்காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி துமகூரு புறநகர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் யாதகிரி மாவட்டம் உனசகியை சேர்ந்த பிரசாத் (வயது 31,) விஜயாப்புரா மாவட்டம் தாளிக்கோட்டையை சேர்ந்த தவ்சிப் (21), மெகபூப் பாஷா (25), சபீர் (27), கெம்பாவியை சேர்ந்த அபி, கலபுரகியை சேர்ந்த நீலம்மா ஹிரேமட் (55) ஆகியோர் காயம் அடைந்தது தெரியவந்தது. இருப்பினும் பஸ் எதற்காக தீப்பிடித்தது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story