மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டிக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டிக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 6:56 PM GMT)

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டிக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவர் வாலண்டினா தலைமை தாங்கினார். ஆவணப்பட இயக்குனர் வைஷ்ணவி சுந்தர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். ‘பணியிடங்களில் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் சுகந்தியும், நுண் நிதி நிறுவனங்கள் என்ற தலைப்பில் தமிழ்ச்செல்வியும் பேசினார்கள்.

மேலும், மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, கோவை நடராஜன் எம்.பி.ஆகியோரும் பேசினார்கள். மாநாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். மாநாட்டில் மாநில செயலாளர் பொன்னுத்தாய் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாலியல் துன்புறுத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம். ஆனால் தேசிய சட்டப்பள்ளி, இந்த குற்றத்திற்கு தண்டனை சமூக சேவை என பரிந்துரைப்பது கேலிக்கூத்தாகும். இது கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு பல தயக்கங்கள் இருக்கும் நிலையில், தேசிய சட்டப்பள்ளியின் சமூக சேவை என்ற பரிந்துரையை ஏற்காமல் நியாயமான தண்டனை வழங்க வேண்டும். சுயஉதவி குழுக் களுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்த வட்டிக்கு வங்கி கடன்களை வழங்கி தொழில் பயிற்சியும் கொடுக்க வேண்டும். பயிற்சியின் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை, அரசே வாங்கி விற்பதற்கான சந்தை வசதியையும் செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் ஏழை, எளிய பெண்களின் மீது நடத்தப்படும் இத்தகைய கொடுமைகளை தடுத்து நிறுத்த முடியும்.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. முன்னதாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமும் நடைபெற்றது. முடிவில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சலோமி நன்றி கூறினார்.

Next Story